ஆண்டிப்பட்டி அருகே பொலிவிழந்து வரும் வைகை அணை பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஆண்டிப்பட்டி அருகே போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் வைகை அணை பூங்கா பொலிவிழந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.;
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை, தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வைகை அணை முன்பாக வலது மற்றும் இடது கரைகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்று, உல்லாச ரெயில் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது வைகை அணை பூங்கா களையிழந்து வருகிறது. வைகை அணையில் அமைக்கப்பட்டு இருந்த புல்வெளிகள் மற்றும் அழகு செடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் பல வருடங்களாக இயங்கி வந்த நீரூற்றுகள் அனைத்தும் செயல்பாடின்றி வறண்டு காணப்படுகிறது.
இதுதவிர பூங்கா பகுதிகளில் கண்கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்த சிலைகளும், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல்களும், சறுக்கு விளையாட்டு உபகரணங்களும் உடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது. வைகை அணை பூங்காவை மாலை 6 மணிக்கு மேல் கண்டு ரசிக்கும்படி வண்ண வண்ண விளக்குகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கடந்த ஒரு ஆண்டாக பூங்காவுக்கு அமைக்கப்பட்ட எந்த விளக்குகளும் எரிவதில்லை. இதனால் மாலை 6 மணிக்கு பின்னர் வைகை அணை பூங்கா இருளில் மூழ்கிவிடுகிறது. இதன்காரணமாக பூங்காவுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கே வைகை அணை பூங்கா மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல வைகை அணை பூங்கா பகுதிகளுக்குள் குடிநீர் வசதியும் இல்லாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் தொட்டிகள் பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் கழிப்பறை வசதியும் குறைவாக இருப்பதால் பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் வைகை அணையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதேநிலை நீடித்தால் வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிடும்.
நாளுக்கு நாள் பொலிவிழந்து வரும் வைகை அணை பூங்காவை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தினால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரிப்பதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.