தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: 67 இடங்களில் வெள்ளப்பாதிப்பு அபாயம், கலெக்டர் தகவல்
தென்மேற்கு பருவமழையின்போது, மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.;
திண்டுக்கல்,
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக் டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய கனமழையினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் கனமழை பெய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் புயல், வெள்ளம் குறித்து எடுக்க வேண்டிய நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ.க்கள் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டம், தாலுகா மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்தி, அது குறித்த அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் 17 இடங்களும், கிழக்கு தாலுகாவில் 9 இடங்களும், நிலக்கோட்டையில் 7, நத்தத்தில் 3, ஆத்தூர் 1, பழனி 6, ஒட்டன்சத்திரம் 14, வேடசந்தூர் 8, கொடைக்கானல் தாலுகாவில் 2 இடங்களும் என மொத்தம் 67 பகுதிகள், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவையாக உள்ளன.
இதனை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்ல தேவையான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் செய்ய வேண்டும். மழைநீர் செல்லும் கால்வாய்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வார வேண்டும்.
வெள்ள பாதிப்புகளை தடுக்க, ஒவ்வொரு துறையினரும் அவசர கால திட்டத்தை தயாரித்து வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் மூலம் அணை பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும். மேலும் நீர்வரத்து, அணையில் உள்ள நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து தினமும் 24 மணி நேரமும் கண்காணித்து, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆறு, குளம் மற்றும் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய, போதுமான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு தேவைப்படும் வாகனங்கள், எந்திரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.
இயற்கை இடர்பாடுகள் குறித்து 1077 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பருவமழை காலத்தில் மாவட்ட நிர்வாகம், போலீஸ், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மருத்துவம், மின்வாரியம், வருவாய் உள்பட அனைத்து துறைகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பேரிடர் மேலாண்மை குறித்து தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, அனைத்து தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.