கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு ரெயிலில் கடத்திய ரேஷன் அரிசியை பழனி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-07-04 00:15 GMT
பழனி, 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கேரள மாநிலம் பாலக் காட்டுக்கு பழனி வழியாக தினமும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், இரவு 7.15 மணிக்கு பழனிக்கு வந்து சேரும். இந்த ரெயிலில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பழனி ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் அந்த ரெயிலில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, ஒரு ரெயில் பெட்டியில் 14 பை களில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். ஆனால் யாரும் அரிசிக்கு உரிமை கொண்டாடவில்லை.

திருச்செந்தூரில் இருந்து பாலக் காட்டுக்கு யாரோ மர்ம நபர்கள் ரேஷன் அரிசியை கடத்தியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை, வழங்கல் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்