பசுமை வழி சாலைத்திட்டம்: அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் தகவல்
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ நிலம் கையகப்படுத்தப்படும். இதற்கான 3எ(1) அறிவிக்கை இந்திய அரசிதழில் 26.6.2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தினசரி நாளிதழ்களிலும் அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.
இந்த நில எடுப்பில் நில உரிமைதாரர்கள் அல்லாதவர்கள் குறிப்பாக வெளியூர் நபர்கள் ஊடுருவி நில உரிமைதாரர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்டாலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டாலும் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.