கால்வாய் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கால்வாய் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-03 23:45 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வல்லக்கோட்டை ஊராட்சியில் உள்ள சந்தியம்மன் கோவில் தெரு, டி.ஆர்.ஆர். நகர், காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் குறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதாகவும், இதனால் மோட்டார்கள், குளிர்சாதன பெட்டி மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்து விடுகிறது.

இதனால் இந்த பகுதிக்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து மின்சார வாரியத்தின் சார்பில் கடந்த வாரம் புதிய டிரான்ஸ்பார்மர் இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.

மின் இணைப்பு துண்டிப்பு

இந்த டிரான்ஸ்பார்மர் கம்பம் கால்வாய் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்ததால் நேற்று முன்தினம் இரவு மழையுடன் காற்று வீசிய போது கால்வாய் ஓரமாக இருந்த மண் மழைநீரில் கரைந்தவுடன் திடீரென டிரான்ஸ்பார்மர் மின் கம்பம் குடியிருப்பு பகுதியின் அருகே சாய்ந்தது. அருகில் இருந்த மேலும் 2 மின் கம்பங்களும் சாய்ந்தது.

இதனால் குடியிருப்புகளில் மற்றும் சாலைகளில் இருந்த பொதுமக்கள் அலறியபடி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை உடனடியாக துண்டித்தனர்.

கோரிக்கை

இதனால் விபத்து எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். இதனையடுத்து நேற்று மதியம் அதே இடத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாய்ந்த டிரான்ஸ்பார்மரை இழுத்து சரி செய்து கிரேன் மூலம் சீரமைத்தனர்.

பலத்த காற்று மழை ஏற்பட்டால் மீண்டும் மின் கம்பம் சாய்ந்து குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் மற்றும் சாலையில் செல்பவர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.

எனவே கால்வாய் ஓரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பத்தை இதே பகுதியில் வேறு இடத்தில் மாற்றி அமைத்து தர வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்