33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டைக்கு சென்று மனு அளித்தனர்

33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டைக்கு சென்று மனு அளித்தனர்.

Update: 2018-07-03 23:30 GMT
சென்னை,

மூடப்படும் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்று நிரந்தரபணி வழங்கவேண்டும் என்பது உள்பட 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ‘டாஸ்மாக்’ பணியாளர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.தனசேகரன், பொருளாளர் டி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது நா.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்று நிரந்தர பணி

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதுக்கடைகளை ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலம் தமிழக அரசே நேரடியாக நடத்தி வருகிறது. மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அரசு உத்தரவுப்படி முதற்கட்டமாக ஆயிரம் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் அக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்று நிரந்தர பணி வழங்கப்படவில்லை.

தவிர ஓய்வுபெறும் ஊழியருக்கு எந்தவிதமான பணப்பயனும் வழங்கப்படுவது கிடையாது. சிறப்பு ஓய்வூதியமும் வரையறுக்கப்படவில்லை. இதற்கிடையில் பணியாளர்கள் மீது தங்கள் வெறுப்புகளை அதிகாரிகள் திணித்து வருகின்றனர். சட்டவிதிகளுக்கு மாறாக பல ‘பார்’கள் செயல்படுகின்றன. முறையான ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளும் பின்பற்றப்படுவது கிடையாது. ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பும் கிடையாது.

கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்

எனவே படிப்படியான மதுவிலக்கு என்பதற்கான கால அட்டவணை நிர்ணயிக்கவேண்டும், மதுக்கடைகள் மூடும்போதும் உபரி பணியாளர்களுக்கு மாற்று நிரந்தர பணி வழங்கிட வேண்டும், ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகும் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் சிறப்பு நிதியாகவும், மாத ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரமும் வழங்கிட வேண்டும், மாமூல் கேட்டு அடாவடி செய்யும் ‘பார்’ ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், ‘டாஸ்மாக்’ பணியாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து கைத்துப்பாக்கி வழங்கவேண்டும் என்பது உள்பட 33 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டையில் மனு

ஆர்ப்பாட்டத்தின்போது, அழைப்பு விடுத்ததின்பேரில் நா.பெரியசாமி, டி.தனசேகரன் உள்பட சங்க நிர்வாகிகள் 6 பேர் கோட்டைக்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு சென்று அரசு துணை செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தனர்.

இதுகுறித்து டி.தனசேகரன் கூறுகையில், “கோட்டையில் கோரிக்கை மனு அளித்ததுடன், முதல்-அமைச்சரை சந்தித்து பேசவேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து வந்திருக்கிறோம். ஏற்கனவே அமைச்சர் தங்கமணி வருகிற 9-ந்தேதி எங்கள் நிர்வாகிகளை அழைத்து பேசுவதாக கூறியிருக்கிறார். முதல்-அமைச்சரிடமும் பேசுவதற்கு ஏற்பாடு செய்துதருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்”, என்றார். 

மேலும் செய்திகள்