திருட முயன்ற மர்ம நபர்கள் அடையாளம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது
பரமக்குடியில் உள்ள செல்போன் கடையில் திருட முயன்ற மர்ம நபர்களின் உருவங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி பகுதி எமனேசுவரத்தை சேர்ந்தவர் சல்மான். இவர் ஆர்ச் பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் கடையில் விற்பனைக்கு இருந்தன. இந்தநிலையில் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் செல்போன் கடையின் பூட்டை அறுத்துள்ளனர். அது மிகவும் கடினமாக இருந்ததால் பூட்டை அறுக்க முடியாமல் பாதியிலேயே விட்டு விட்டனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடுபோகாமல் தப்பின. தொடர்ந்து அருகில் இருந்த இவரின் மற்றொரு கடையின் பூட்டை மர்ம நபர்கள் அறுத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த ஸ்டேசனரி கடையின் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.
கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களின் உருவங்கள் பக்கத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து செல்போன் கடை உரிமையாளர் சல்மான் பரமக்குடி நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை நடத்தி னார். அதில் கேமராவில் பதிவாகியுள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் பற்றாக்குறை உள்ளதால், கொள்ளையர்களை எவ்வாறு பிடிப்பது என்று குற்றப்பிரிவு போலீசார் புலம்புகின்றனர்.