உணவு பொருட்கள் தொடர்பான புகாரை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்
மாவட்டத்தில் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர்(பொறுப்பு) இளங்கோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர்(பொறுப்பு) இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீர் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்துகொள்ள உணவு பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த துறையின் https:/safe waterfssai.gov.in//cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேன்களில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவு பாதுகாப்புதுறை உரிம எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம், ஓராண்டு பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம் மற்றும் உணவு பாதுகாப்புதுறையின் அனுமதி எண், காலாவதி காலம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு தண்ணீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் மற்றும் கேன்களிலும் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் எண் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் எண் ஆகியவற்றை பதிவிட்டு இருக்க வேண்டும். இந்த 2 எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை இந்த இணையதளத்தை பயன்படுத்தி அங்குள்ள செயலியில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால் அந்த நிறுவனத்தின் தரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், இந்த நிறுவனத்தின் தண்ணீர் ஆய்வக அறிக்கையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
எனவே இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி பொதுமக்கள் குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டு, கேன்களின் தரத்தை தெரிந்துகொள்ளலாம். பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் உணவு பொருட்களில் மூலப்பொருள்கள், உணவு பாதுகாப்பு உரிமம் எண், காலாவதியாகும் தேதி போன்ற விவரங்கள் உணவு பொருள்கள் உறையின் மீது அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து பொதுமக்கள் வாங்க வேண்டும். இதுபோன்ற விவரங்கள் இல்லாத உணவு பொருள்களை நுகர்வோர்கள் வாங்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்பந்தபட்ட புகார்களுக்கு துறையின் வாட்ஸ்-அப் எண் 94440 42322-ஐ தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.