கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்க கட்டிகள் கடத்தல்

கோவை விமான நிலையத்தில் எந்திரத்துக்குள் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-04 00:00 GMT
கோவை, 

சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு சூட்கேசில் இருந்த சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ)‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகளை சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும்.

இதனை கடத்தி வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்