தாவணகெரே அருகே உருக்கமான கடிதம் எழுதி விட்டு பல்கலைக்கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலைவாய்ப்புகள் இல்லை என பல்கலைக்கழக மாணவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-03 22:00 GMT
பெங்களூரு, 

வேலைவாய்ப்புகள் இல்லை என பல்கலைக்கழக மாணவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்‘ என்று மத்திய-மாநில அரசுகளுக்கு அவர் உருக்கமாக எழுதிய கடிதமும் சிக்கியது.

மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா ஒசநகர் பகுதியை சேர்ந்தவர் அனில்(வயது 22). இவர் தாவணகெரே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்தவுடன் பசவா பட்டணா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, படித்தவர்கள் மற்றும் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு எளிதில் வேலை வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்பதை நினைத்து வருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அனில் கூறியிருப்பதாவது:-

மத்திய-மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு

“மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் இருந்து தவறிவிட்டது. அரசியல்வாதிகள் தங்களின் மகன்-மகள்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டும் வேலை வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். படித்த இளைஞர்கள் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழல் எனக்கும் வந்துள்ளது. இதை மாற்ற வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் செயல்பாட்டால் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு பிறகாவது மத்திய-மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.“

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வீடியோ

மேலும், கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்களை அவர் வீடியோவாகவும் பேசி தனது செல்போன் மூலம் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். இதுகுறித்து, பசவா பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்