கால்வாய்களில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது மண்டியா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கினர்
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களில் பாய்ந்தோடுகிறது. இதனால் மண்டியா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
மண்டியா,
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களில் பாய்ந்தோடுகிறது. இதனால் மண்டியா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடகத்தில் பாய்ந்தோடும் முக்கிய ஆறுகளில் ஒன்றாக விளங்குவது காவிரி ஆறு. தற்போது கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தில் பல்வேறு அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளன. குறிப்பாக குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணை வேகமாக நிரம்பி வருகிறது. கே.ஆர்.எஸ். அணையின் முழு கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 108.76 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,039 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,537 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கால்வாய்களில் பாய்ந்தோடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழைக்கால பயிர்கள்
இதன்காரணமாக விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். அவர்கள் தற்போது மழை கால பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள். அதாவது விவசாயத்துறை இந்த ஆண்டு மழைக்காலத்தில் 2 லட்சத்து ஒரு ஆயிரத்து 869 ஹெக்டேரில் மழை காலப் பயிர்களை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போது விவசாயிகள் வெறும் 23 ஆயிரம் ஹெக்டேர் அளவில்தான் மழைக்கால பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயத்துறை இணை இயக்குனர் ராஜ சுலோச்சனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்
விவசாயத்துறை சார்பில் இவ்வாண்டு பருவமழை காலத்தில் 2 லட்சத்து ஒரு ஆயிரத்து 869 ஹெக்டேர் அளவில் மழை காலப் பயிர்களை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக 59,650 ஹெக்டேர் அளவில் நெல்லும், 63,365 ஹெக்டேர் அளவில் கேழ்வரகும், 30,605 ஹெக்டேர் அளவில் கரும்பும் சாகுபடி செய்ய திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டியா, மத்தூர், மலவள்ளி, பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.பேட்டை, நாகமங்களா ஆகிய 7 தாலுகாக்களிலும் இம்முறை நல்ல மழை பெய்துள்ளது. கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. உரம் மற்றும் விதைகளும் போதுமான அளவு இருப்பு உள்ளன. அதனால் விவசாயிகள் இப்போதே அதிக அளவில் பயிர்களை பயிரிட்டு அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.