வேறு சாதி என்பதால் திருமணத்துக்கு காதலியின் தந்தை எதிர்ப்பு: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

வேறு சாதி என்பதால் திருமணத்துக்கு காதலியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், மனம் உடைந்த தனியார் நிறுவன ஊழியர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2018-07-03 22:00 GMT
துமகூரு, 

வேறு சாதி என்பதால் திருமணத்துக்கு காதலியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், மனம் உடைந்த தனியார் நிறுவன ஊழியர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் பேசும் உருக்கமான வீடியோவை முகநூலில் பதிவிட்டு அவர் உயிரை மாய்த்தார்.

இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திருமணத்துக்கு எதிர்ப்பு

துமகூரு டவுன் கியாத்த சந்திராவில் உள்ள பசவபட்டணா பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா(வயது 26). டிப்ளமோ படித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், தனது கல்லூரியில் படித்த துருவகெரே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் ராகவேந்திரா மற்றும் அவருடைய காதலியின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. ராகவேந்திராவும், அவர் காதலிக்கும் இளம்பெண்ணும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது, ராகவேந்திராவின் காதல் திருமணத்துக்கு இளம்பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. வேறுவேறு சாதி என்பதால் அவர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மகள் உடனான காதலை கைவிடும்படி அவர் ராகவேந்திராவிடம் கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால், ராகவேந்திரா மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், நேற்று ராகவேந்திரா தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்தவுடன் கியாத்தசந்திரா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராகவேந்திராவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர் காதல் திருமணம் கைகூடாததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான வீடியோ

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், ராகவேந்திரா தனது தற்கொலைக்கு முன்பு அதற்கான காரணத்தை முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு உள்ளது தெரியவந்தது. அந்த வீடியோவில் ராகவேந்திரா தனது காதலியையும், காதலியின் தந்தையையும் குறிப்பிட்டு உருக்கமாக பேசுகிறார். வீடியோவில், ராகவேந்திரா பேசியதாவது:-

சாதி, சாதி என்று எதற்காக கூறுகிறீர்கள். இறக்கும்போது சாதி உங்களுடன் வருகிறதா?. உயிருடன் என்னையும், உங்களின் மகளையும் கொல்கிறீர்களே?. இது எதற்காக. ஒருபோதும் அவள் முன்பு நான் வருவது கிடையாது என்று கூறினேன். ஆனால் கூறியது போன்று என்னால் இருக்க முடியவில்லை. ஏனென்றால் நான் பொய்யாக காதல் செய்யவில்லை.

நான் உயிருடன் இருந்தால் அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வருவேன். அப்போது, அவளை நீங்கள் அடிப்பீர்கள். இதனால் அவளுக்கு வலி ஏற்படும். இனி ஒருபோதும் உங்கள் மகள் முன்பு நான் வரமாட்டேன். நான் உயிரை விட்டு விடுகிறேன். அவள் எங்கு இருந்தாலும் நன்றாக வாழ வேண்டும். அவளை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். ஐ லவ் யூ‘.

இவ்வாறு ராகவேந்திரா உருக்கமாக கூறினார்.

போலீஸ் விசாரணை

வெவ்வேறு சாதி என்பதால் காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாத வருத்தத்தில் ராகவேந்திரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கியாத்தசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்