கைலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 290 கன்னடர்களுக்கு உதவி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு

கைலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 290 கன்னடர்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-07-03 22:00 GMT
பெங்களூரு, 

கைலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 290 கன்னடர்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

290 கன்னடர்களை காப்பாற்ற...

கர்நாடகத்தில் இருந்து சுமார் 290 பேர் கைலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்றனர். அவர்கள் பெங்களூரு, தார்வார், கலபுரகி, ஹாசன், மண்டியா, ராமநகர், மைசூரு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது அங்கு மழை அதிகமாக பெய்து வருவதால், அவர்கள் உதவிகள் இன்றி சிக்கி தவிக்கிறார்கள். சாலைகள், வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தை சேர்ந்த 290 கன்னடர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி கர்நாடக பவன் கமிஷனருக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படியும் அவர் கூறி இருக்கிறார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை குமாரசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கைலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற கன்னடர்கள் நடுவழியில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்க உதவுமாறும் குமாரசாமி கேட்டுக் கொண்டார். தேவையான நடவடிக்கை எடுப்பதாக சுஷ்மா சுவராஜ் உறுதியளித்தார்.

குடிநீர், உணவு

டெல்லி கர்நாடக பவனில் ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிலருடன் செல்போனில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசினர்.

மேலும் செய்திகள்