கவர்னரின் நடவடிக்கையால் எந்த வசூலும் அதிகரிக்கவில்லை அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

கவர்னரின் நடவடிக்கையால் எந்த வசூலும் அதிகரிக்கவில்லை என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Update: 2018-07-03 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து கவர்னரின் நடவடிக்கையை பாராட்டி பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அசோக் ஆனந்து: கவர்னர் உரை என்பது சம்பிரதாய உரையாக உள்ளது. எல்லாதுறையிலும் நிதிப்பற்றாக்குறை உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. கவர்னர் உரை அரசு தயாரித்த உரையாகவே உள்ளது. கவர்னர் தயாரித்து இருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஸ்மார்ட் சிட்டி, சுற்றுலா திட்டங்களுக்கு நிதி வந்துள்ளது. கவர்னர் கிரண்பெடி சிறப்பாக செயல்படுகிறார் என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

அப்போது அரசு கொறடா அனந்தராமன் எழுந்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அனந்தராமன்: இவர் கவர்னரின் விளம்பர தூதர்போல் செயல்படுகிறார். கவர்னரை பாராட்ட வேண்டும் என்றால் கவர்னர் மாளிகைக்கு சென்று பாராட்டுங்கள். நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

சிவா (தி.மு.க.): மாநில சுயாட்சிக்கு எதிராக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

அசோக் ஆனந்து: கவர்னர் மின்துறைக்கு ஆய்வுக்கு சென்றார். அவர் சென்ற பின் ரூ.50 கோடி வசூல் ஆகியுள்ளது.

அமைச்சர் கமலக்கண்ணன்: ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூல் என்பது நாடகம். அது ஒரு ஏமாற்று வேலை. உறுப்பினரின் தவறான தகவலை மறுக்கிறேன். முதலில் உண்மை தகவல்களை கேட்டு பேசுங்கள். அதற்கு முன்பைவிட கடந்த மாதம் வசூல் குறைந்துள்ளது.

சபாநாயகர் வைத்திலிங்கம்: மின்துறையில் எவ்வளவுதான் வசூலானது? உண்மை நிலையை அமைச்சர் சபையில் தெரிவிக்கவேண்டும்

அமைச்சர் கமலக்கண்ணன்: மின்துறையில் ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூல் ஆனது என்ற செய்தி வெளியானவுடன் துறை செயலாளரிடம் உடனடியாக மறுப்பு தெரிவிக்க சொன்னேன். ஆனால் ஏதோ காலதாமதம் செய்துவிட்டார்கள். கவர்னர் அதிகார பதவியில் உள்ளவர் என்பதால் அவர் அலுவலகத்தில் இருந்து வெளியான செய்தி உண்மை என்று பத்திரிகையில் பிரசுரிக்கிறார்கள்.

உண்மையிலேயே அதற்கு முந்தைய மாதம் ரூ.109 கோடி வசூல் ஆனது. ஆனால் கடந்த மாதம் ரூ.112 கோடி வசூலானது. கவர்னர் ஆய்வுக்கு சென்ற தினத்தில் மட்டும் ரூ.39 லட்சம் கூடுதலாக வசூலானது. இதுதவிர எந்த கூடுதல் வருவாயும் வரவில்லை. ஆனால் அதனை விளம்பரப்படுத்த நாளொன்றுக்கு ரூ.4 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கவர்னரின் ஆய்வினால் கூடுதல் வருவாய் எதுவும் வரவில்லை. ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாதத்தின் இறுதியில் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மின் கட்டணத்தை செலுத்துவது வழக்கம். அதன்படிதான் இறுதியில் அதிக அளவு தொகை வசூலாகிறது. இது வழக்கமான ஒன்றுதான். கவர்னர் ஆய்வுக்கு சென்றதால் இது வரவில்லை.

கவர்னர் ஆய்வுக்கு செல்வது தொடர்பாகவோ, மின் பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவது தொடர்பாகவோ துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ரூ.109 கோடி வசூலிக்கப்பட்ட தொகை கடந்த மாதம் ரூ.112 கோடியாக உயர்ந்ததற்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணமும் ஒரு காரணம். எனவே கவர்னரின் நடவடிக்கையால் எந்த வசூலும் அதிகரிக்கவில்லை.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். 

மேலும் செய்திகள்