நெய்வேலியில் மக்கள் மருந்தகம் என்.எல்.சி. தலைவர் திறந்து வைத்தார்

நெய்வேலியில் மக்கள் மருந்தகத்தை என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் சரத்குமார் ஆச்சார்யா திறந்து வைத்தார்.

Update: 2018-07-03 23:15 GMT
நெய்வேலி, 

பிரபல மருத்துவரும் மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராய் சமுதாயத்திற்கு ஆற்றிய, தன்னலமற்ற சேவை மற்றும் மருத்துவத் தொழிலில் அவர் காட்டிய ஈடுபாடு ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும், ஜூலை மாதம் 1-ந்தேதி, “தேசிய மருத்துவர் தினம்“ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை வளாகத்தில், தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா கலந்து கொண்டு பேசினார்.

மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகள், பயன்படுத்தாத நிலையில் அதனை மீண்டும் சேகரிக்கும் வசதியை தொடங்கி வைத்தார். இதற்கான பெட்டிகள் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை வளாகத்திலும், நகரியத்தின் முக்கியப் பகுதிகளிலும் வைக்கப்பட உள்ளன. இதன் மூலம் இதுபோன்ற மருந்துகளை வாங்க வசதியில்லாத கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர்கள் ஜி.ஜெயராஜ், பி.தன்யாகுமாரி, ஜனார்த்தனன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கும், பொதுமக்களுக்கும் மிகக்குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக, மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் மக்கள் மருந்தகத்தினை, மருத்துவமனை வளாகத்தில் சரத்குமார் ஆச்சார்யா திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் என்.எல்.சி. இந்தியா நிறுவன இயக்குனர்கள் ராக்கேஷ்குமார், வி.தங்கபாண்டியன், மருத்துவத்துறை பொது கண்காணிப்பாளர் டாக்டர் எம்.கே.ஜா, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்