8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி கயிறு கட்டி மீட்பு

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கயிறு கட்டி மீட்டனர். அப்போது அவர் ‘கிணற்றை மூடும்போது என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்’ என கதறியது உருக்கமாக இருந்தது.

Update: 2018-07-03 23:00 GMT
செய்யாறு,

சேலம்- சென்னை 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக விவசாய நிலங்கள், குடியிருப்புகள், பள்ளிகள் ஆகியவை கையகப்படுத்தப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்கொளத்தூரில் இருந்து பெரும்பாளை கிராமம் வரை நேற்று முன்தினம் 2-வது நாளாக அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து நேற்று 3-வது நாளாக பெரும்பாளை கிராமத்தில் இருந்து மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடும் பணியை தொடர்ந்தனர்.

தென்மாவந்தல் கிராமத்தில் அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது புறம்போக்கு நிலத்தில் இருந்த 10 வீடுகளை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அளவீடு செய்து கல் நடப்பட்டது. இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது அந்த வீட்டின் உரிமையாளர்கள் “நாங்கள் இதுநாள் வரை வாழ்ந்த வீடுகளை விட்டு வெளியேற மாட்டோம்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், பசுமை வழிச்சாலை திட்ட தொடர்பு அலுவலர் உலகநாதன் அங்கு வந்து, வீட்டின் உரிமையாளர்களிடம், “நீங்கள் வசிக்க வேறு இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கு பட்டா வழங்கப்படும். உரிய இழப்பீடும் பெற்று தரப்படும்” என்றார்.

இதையடுத்து அருகில் உள்ள அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 73) என்பவரின் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலமும், ஒரு கிணறும் கையகப்படுத்தப்பட்டதாக அளவீடு செய்து கல் நடப்பட்டது. இதைப்பார்த்த கிருஷ்ணன் தனது நிலத்தில் விழுந்து, புரண்டு கதறி அழுதார். எனினும் ஒருபுறம் அதிகாரிகள் அளவீடு பணியை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் ஓடிச் சென்று அருகில் உள்ள தனது கிணற்றில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக ஓடிச் சென்று, கிராம மக்கள் உதவியுடன் கிருஷ்ணனை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், “எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் விவசாயம் பார்த்து வருகிறேன். எனக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. எனது நிலம் பறிபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாலை அமைக்கும்போது மூடப்படும் எனது கிணற்றிற்குள்ளே என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்” என்று கதறினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அதிகாரிகள் செங்காடு கிராமம் வரை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்