ஆதார்கார்டு நகலை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும்

ஆதார்கார்டு நகலை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறினார்.;

Update: 2018-07-03 23:15 GMT
காங்கேயம், 

காங்கேயம் தாலுகாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் பெறுவதற்கும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு அரிசி ஆலை அரங்கில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமை தாங்கினார். காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வரவேற்றார். இதில் தாசில்தார் மகேஸ்வரன், கூடுதல் கண்காணிப்பாளர் மாடசாமி, காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க பொறுப்பாளர் ராமசாமி, காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் அருணாச்சலம் மற்றும் கல் உடைக்கும் ஆலை உரிமையாளர்கள், நூற்பாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பேசியதாவது:-

காங்கேயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும்போது, தொழிலாளர்களை அழைத்து வரும் முகவரின் விவரம் மற்றும் தொழிலாளர்கள் குறித்த விபரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். மேலும் படிவங்களை பூர்த்தி செய்து தொழிலாளர்களின் ஆதார்கார்டு நகலை புகைப்படத்துடன் கூடிய நகலை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் குற்றப்பின்னணியுடன் இங்கே வந்து வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். எனவே அவர்களை வேலைக்கு சேர்க்கும்போது ஆதார்கார்டு நகல் பெற்றுக்கொள்வது நல்லது. அவ்வாறு பெற்றுக்கொள்ளும்போது போலியான ஆவணங்களை கொடுக்க முடியாது.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அது பாதுகாப்பானது. குற்றவாளிகளை கண்டு பிடிக்க கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா? என்று அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

முன்னதாக தொழிற்சாலைகளில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கும் சேர்க்கும்போது அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க படிவங்களையும், கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

மேலும் செய்திகள்