ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் வளர்ச்சி பணி மேற்கொள்ள அதிகாரிகள் குழு ஆய்வு கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வளர்ச்சி பணி மேற்கொள்ள பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழு ஆய்வு செய்து வருவதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வளர்ச்சி பணி மேற்கொள்ள பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழு ஆய்வு செய்து வருவதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
கருத்து கேட்பு கூட்டம்ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 15 கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, மக்களிடம் கருத்துகள் கேட்டார். அப்போது அதிகப்படியான மக்கள் சாலை வசதி கேட்டும், குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். இதில் புதியம்புத்தூர், அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம், ஜம்புலிங்கபுரம், கைலாசபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திட்ட மதிப்பீடுபின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது;– ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே மாதம் அரசாணை படி சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அந்த ஆலையை சுற்றி இருக்கக்கூடிய 15 கிராமங்களில் 100 சதவீதம் வளர்ச்சியை ஏற்படுத்த எனது(கலெக்டர்) தலைமையில் ஒரு தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் உதவி கலெக்டர், மாவட்ட ஊரக திட்ட அலுவலர், டாக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.
இந்த குழுவின் முக்கிய நோக்கம், கிராமங்களுக்கு நேரடியாக சென்று என்ன அடிப்படை வசதிகள் தேவை, என்ன வசதிகள் இருக்கின்றன என்றும், அந்த பகுதிகளில் 100 சதவீதம் வளர்ச்சியை கொண்டு வர ஆய்வு மேற்கொள்வர். பின்னர் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அந்த குழு மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது இந்த குழுவினர் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணிகள் சரியான முறையில் நடக்க நானும் (கலெக்டர்) மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டு வருகிறேன்.
கைது நடவடிக்கை இல்லைஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற பொருட்களை வெளியே கொண்டு செல்லும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 10 லாரிகள் மூலம் கந்தகம், பாஸ்பாரிக் அமிலம் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த பணியை 30 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த ஆலையில் இருந்து ஜிப்சம் எடுப்பதற்கு மட்டும் அதிக நாட்கள் தேவைப்படும்.
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் விசைப்படகுகளின் நீளம், மோட்டார் திறன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு அறிக்கை எனக்கு கிடைத்த பின்னர், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலவரம் தொடர்பாக கடந்த 10 நாட்களாக யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
யார்–யார்?இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஞானராஜ், யூனியன் ஆணையாளர் இசக்கியப்பன், வருவாய் ஆய்வாளர் ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.