தூத்துக்குடியில் இரவு நேரத்தில் ‘‘வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது’’ முத்தரசன் பேட்டி

‘‘தூத்துக்குடியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது‘‘ என்று முத்தரசன் கூறினார்.

Update: 2018-07-03 21:00 GMT

கோவில்பட்டி,

‘‘தூத்துக்குடியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது‘‘ என்று முத்தரசன் கூறினார்.

கவர்னருக்கு கருப்புக்கொடி

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். அவர், முதல்– அமைச்சருக்கு தெரிவிக்காமலேயே, தலைமை செயலாளர் மூலம் பயண திட்டத்தை வகுத்து கொண்டு பல்வேறு ஊர்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். கவர்னர் இனி எங்கு ஆய்வுக்கு சென்றாலும், எனது (முத்தரசன்) தலைமையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

சட்டசபையில் தீர்மானம்

காவிரியில் இந்த மாதம் 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு கர்நாடக மாநில முதல்–மந்திரி குமாரசாமி, தேவகவுடா, முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு இரு மாநிலங்களுக்கும் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசுவதை அவர்கள் கைவிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவு தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும். மேலும், முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சியினர், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து கலந்து பேசி, காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

கொலை வழக்கு

தூத்துக்குடியில் அமைதி திரும்பி வரும் வேளையில், காவல் துறையினர் இரவு நேரங்களில் வீடு புகுந்து பெண்களை மிரட்டுவதும், இளைஞர்களை கைது செய்வதும் கண்டிக்கத்தக்கது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் உருவாகி வருகிறது. அரசு தவறு செய்ததை மறைக்கும் வகையில், யார் மீதாவது குற்றத்தை சுமத்தி தப்பிக்க முயற்சிக்கிறது.

தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு அப்போதைய கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

பசுமை சாலை தேவையற்றது

சேலம்–சென்னை இடையே ஏற்கனவே 3 சாலைகள் இருக்கின்றபோது, 8 வழி பசுமை சாலை அமைப்பது தேவையற்றது. ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை விரிவுபடுத்தினாலே போதுமானது. ஆனால் பசுமை சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை பறித்து எல்லை கற்களை நடுவதிலே மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை செயல்படுத்தினால், 20 சதவீத கமி‌ஷனாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும் என்பதாலே, இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக உள்ளார்.

இந்த பசுமை சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சேலத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

நாளை, உண்ணாவிரதம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) எனது (முத்தரசன்) தலைமையில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் அழகுமுத்து பாண்டியன் (தூத்துக்குடி), காசி விசுவநாதன் (நெல்லை), நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கடம்பூர் நகர செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், சேதுராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்