குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-03 22:15 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் ஊராட்சியில் ஈச்சம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்களுக்கு அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் ஆழ்குழாயில் இருந்து தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து நக்கசேலம் ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் குடிநீர் வினியோகம் செய்ய எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பெரம்பலூர்-துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரன், ஆலத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்