26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர் யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடின

நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதனால் மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.;

Update: 2018-07-03 21:30 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதனால் மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிறுத்த வேண்டும்.

கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் நேற்று இந்த போராட்டம் தொடங்கியது. பெரும்பாலான ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகம், யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டு, பணிகளும் பாதிக்கப்பட்டன. மேலும் பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் முத்துகுட்டி தலைமை தாங்கினார். மற்றொரு ஒருங்கிணைப்பாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி செயலாளர் சங்க நிர்வாகிகள் சங்கர், முத்துகிருஷ்ணன், சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணினி இயக்குனர்கள், பணி மேற்பார்வையாளர்கள், என்ஜினீயர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம்

கடையம் யூனியன் அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு கடையம் வட்ட கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெய சக்திவேல் முன்னிலை வகித்தார். மாரியப்பன் வரவேற்றார். ராமசாமி வாழ்த்தி பேசினார். சுகாதார ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் யூனியன் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியதால் யூனியன் அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி கிடந்தன.

மேலும் செய்திகள்