ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 24-ந் தேதி போராட்டம்

ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு வருகிற 24-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் லாசர் கூறினார்.

Update: 2018-07-03 23:00 GMT
தஞ்சாவூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் லாசர் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் திருநாவுக்கரசு, மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், பொருளாளர் சங்கர், செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி மற்றும் நிர்வாகிகள் வசந்தாமணி, சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் லாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகளிர் சுயஉதவிக்குழு வினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 1000 விற்பனை கூடங்கள் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் ரூ.600 கோடியில் கட்டப்படும் என கடந்த ஜனவரி மாதம் நடந்த சட்டசபை கூட்ட தொடரின்போது 110 விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இந்த ரூ.600 கோடி எடுத்து செலவிடப்பட உள்ளது. கட்டுமான பணிகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டவிதி உள்ளது. ஆனால் கட்டுமான பணிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி பயன்படுத்தப்படுவது சட்டவிரோதமானது.

இது, அந்த சட்டத்தையே சீர்குலைப்பதாகும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசும், மாநில அரசும் போட்டுள்ள பல புதிய உத்தரவுகளால் ஏறக்குறைய ஓராண்டாக சரிவர வேலை கிடைக்காமல் கிராமப்புற ஏழை மக்கள் வறுமையில் வாடும் நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு இத்திட்டத்தை முற்றிலும் சீர்குலைக்கும் செயலாகும். எனவே இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்தகாரர்களையும், எந்திர பயன்பாட்டையும் பயன்படுத்துவது சட்டவிரோதம் என விதி கூறுகிறது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஏறக்குறைய 300 பேர், 500 பேர் என ஒரு நாளைக்கு வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 முதல் 10 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.224 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாநில நிதியா? அல்லது ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி மத்திய அரசால் வழங்கப்படும் நிதியா? என்பதையும், அதை செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் என்ன என்பதை தமிழக அரசு உடனடியாக விளக்க வேண்டும்.

4-வது ஆண்டாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் கைநடவு செய்யும் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் புறக்கணிக்கும் விதத்தில் எந்திரங்கள் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.40 கோடி கிராமப்புற பெண் விவசாய தொழிலாளர்களுக்கு நடவு கூலியாக கிடைக்க வேண்டியது. ஆனால் அந்த தொகையை எந்திரங்கள் மூலம் நடவு செய்பவர்களுக்கு வழங்க தமிழக அரசு துடிப்பதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். எனவே கைநடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதம்(ஆகஸ்டு) சென்னை தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்