துலே அருகே குழந்தை கடத்தல் வதந்தியால் நடந்த பயங்கரம்: கொலையான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்

குழந்தை கடத்தல் வதந்தியால் அடித்து கொல்லப்பட்ட 5 பேர் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-03 04:19 GMT
மும்பை,

மராட்டியத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று தீவிரமாக செயல் பட்டு வருவதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதனால் பொது மக்கள் பீதியடைந்து காணப்பட்டனர்.

இந்தநிலையில் துலே மாவட்டம் ரெயின்படா கிராமத்துக்கு நேற்று முன்தினம் ஒரு கும்பல் அரசு பஸ்சில் வந்திறங்கியது. அவர்கள் அங்கிருந்த 6 வயது சிறுமியுடன் பேச்சு கொடுக்க முயற்சித்தனர். இதனைக் கண்ட கிராம மக்கள் அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என த வறாக நினைத்து சரமாரியாக தாக்கத்தொடங்கினர்.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எவ்வளவு மன்றாடியும் காதுகொடுத்து கேட்காத பொதுமக்கள் கட்டை, செருப்பு, கற்கள் உள்ளிட்டவற்றால் அவர்களை கொடூரமாக தாக்கினர். இந்த கோர தாக்குதலில் கும்பலை சேர்ந்த 5 பேர் துடிதுடித்து அந்த இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலியானவர் களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் படுகொலை செய்யப் பட்டவர்கள் சோலாப்பூர் மாவட்டம் கவே கிராமத்தை சேர்ந்த பாரத் மால்வே (வயது46), தாதா சங்கர் போஸ்லே(35), பாரத் போஸ்லே(48), அப்பா சாகேப் ஷிண்டே(22) மற்றும் ராஜேந்திர போஸ்லே(44) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

வறட்சி காரணமாக பிழைக்க வழியின்றி வேலைதேடி அவர்கள் சுற்றித்திரிந்தபோது, கிராம மக்களிடம் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே ரெயின்படாவில் கிராம மக்கள் கும்பலை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக நேற்று முன்தினம் கிராமமக்கள் 15 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 23 பேரை கைது செய்தனர்.

இது குறித்து துலே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்குமார் கூறுகையில், ‘5 பேர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் இதுவரையில் கிராம மக்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

இந்தநிலையில் டெல்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆகிர், துலே சம்பவத்துக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ‘துலே சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி பட்னாவிசுடன் பேசினேன். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது’ என தெரிவித்தார்.

இதற்கிடையே பா.ஜனதா அரசின் திறமையின்மை காரணமாகவே துலேயில் 5 பேர் அடித்து கொல்லப்பட நேர்ந்ததாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ஏற்கனவே ஜல்காவ் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி பா.ஜனதா எம்.எல்.ஏ. தலைமையிலான சிலர் ஒரு கும்பல் மீது தாக்குதல் நடத்தி இருப்பதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.

மேலும் செய்திகள்