நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பெண்ணை கல்லால் தாக்கிய வங்கி ஊழியர் - போலீசார் விசாரணை

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பெண்ணை கல்லால் தாக்கிய வங்கி ஊழியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-03 02:08 GMT
நெல்லை,

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை அடுத்து உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மனைவி செல்வி (வயது 41). இவர் நேற்று இரவில் தனது மகள், தம்பி மற்றும் உறவினருடன் நெல்லை சந்திப்பு த.மு.ரோட்டில் பிளாட்பாரத்தில் உள்ள கடையில் இட்லி வாங்கி கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் செல்வி மற்றும் அவருடன் நின்றவர்களிடம் தகராறு செய்தனர். உடனே செல்வி அந்த வழியாக சென்ற போலீசாரிடம் இதுகுறித்து தெரிவித்தார். போலீசார் அந்த 3 வாலிபர்களையும் எச்சரித்து அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து இட்லி வாங்கிவிட்டு செல்வி தனது உறவினர்களுடன் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த 3 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து செல்வியிடம் மீண்டும் தகராறு செய்து, அவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செல்வி காயம் அடைந்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். காயம் அடைந்த செல்வியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பி ஓடியவர்களை விரட்டி சென்றனர். 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். ஒரு வாலிபரை மட்டும் போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த நபர் நெல்லை டவுன் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிமுத்து (24) என்பதும், இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவருடன் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் வந்ததும் தெரியவந்தது. மாரிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்