ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் - அதிகாரிகள் பாராட்டு

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் பத்திரமாக மீட்டார்.

Update: 2018-07-03 01:32 GMT
சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 11-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயிலில் 35 வயதுடைய பெண் அவசர அவசரமாக ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் நடுவில் சிக்கிய அந்த பெண்ணை 11-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனா விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார்.

இந்த செயல் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவு வீரர் ஆர்.கே.மீனாவை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்