காஞ்சீபுரம்-திருவள்ளூரில் ரெயில் மறியல் போராட்டம் - 361 பேர் கைது

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 361 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-03 01:14 GMT
காஞ்சீபுரம்,

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக செய்யும் மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று காலை காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பாரதிஅண்ணா தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் முன்பு ஒன்று கூடினர்.

பின்னர் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து காஞ்சீபுரம் போலீசார், ரெயில் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள், திடீரென ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி 20 பெண்கள் உட்பட 110 பேரை கைது செய்தனர். அனைவரையும் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பொன்னேரியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொன்னேரி போலீசார், ரெயில் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 101 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்