திருவள்ளூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2018-07-03 00:50 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளவர்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் குடிநீர் இன்றி கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இது பற்றி அவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் அவர்களுக்கு சரியான முறையில் மின்சாரமும் வழங்கப்படவில்லை. குப்பைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தங்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கேட்டும் நேற்று அந்த பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையான கூடப்பாக்கம் பகுதியில் கையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்து வந்த வெள்ளவேடு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்