மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியல்-ஆர்ப்பாட்டம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்ட திருத்தத்தை கண்டித்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-03 00:21 GMT
காரைக்குடி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை திருத்தி, அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும் காரைக்குடியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காரைக்குடி தாலுகா செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலுக்கு கட்சியினர் முயன்றனர். அப்போது மறியலுக்கு முயன்ற தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், கருப்புசாமி, கல்லல் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட 30 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இதேபோன்று சிவகங்கை ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமொழி, துணைச் செயலாளர் சுடர்மணி, சிவகங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, தியாகி இமானுவேல் பேரவையை சேர்ந்த குப்பமுத்து, பிச்சைமுத்து ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மானாமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரய்யா, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், இளையான்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் முனியராஜ், நகர செயலாளர் விஜயகுமார், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பாலு, நகர செயலாளர் புரட்சிதாசன், தியாகி இமானுவேல் பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியல் செய்த 40 பெண்கள் உள்பட 68 பேரை போலீசார் கைதுசெய்தனர். 

மேலும் செய்திகள்