திருச்சி காந்தி மார்க்கெட்டை விட்டு இடம் பெயர மறுக்கும் காய்கறி வியாபாரிகள்

கள்ளிக்குடியில் திறக்கப்பட்ட கடைகள் மூடப்பட்டதால் திருச்சி காந்தி மார்க்கெட்டை விட்டு வியாபாரிகள் இடம் பெயர மறுத்து வருகிறார்கள். லாரிகளை தடுத்து நிறுத்தினால் தொடர் கடையடைப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2018-07-03 00:20 GMT
திருச்சி,

திருச்சி மாநகரின் மையப்பகுதியாக விளங்கும் இடத்தில் காந்தி மார்க்கெட் கடந்த 1924-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் இதர பொருட்கள் லாரிகளிலும், கனரக வாகனங்களிலும் கொண்டு வரப்படுவது வழக் கம். குறைந்த விலையில் காய்கறிகள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததால், பல்வேறு ஊர்களில் இருந்தும் சாரை சாரையாக மக்கள் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து என எப்போதுமே காந்தி மார்க்கெட் பரபரப்பாக காணப்படும்.

திருச்சி மாநகராட்சி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ‘ஸ்மார்ட்’ சிட்டிக்காக தேர்வான நகரங்களில் ஒன்றானது. அதைத்தொடர்ந்து மாநகரை நவீனப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அவற்றில், தற்போது காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் காந்திமார்க்கெட் இடத்தை நவீனப்படுத்தி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முனைப்பு காட்டப்பட்டது.

அதன்விளைவாக, காந்தி மார்க்கெட் முழுமையாக திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கள்ளிக்குடி கிராமத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. ரூ.77 கோடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம் கடந்த 30-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கும் வந்தது. அன்றைய தினம் 300 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டாலும் வெறும் 5 கடைகள் மட்டுமே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டன.

அதே வேளையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் அங்கிருந்து நகரமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனாலும், மாவட்ட நிர்வாகம் கள்ளிக்குடிக்கு மார்க்கெட் மாற்றப்பட்டு விட்டதால் 30-ந் தேதி முதல் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை காந்தி மார்க்கெட்டுக்குள் நுழைய விடாமல் போலீசார் மூலமாக தடை விதித்தது.

இதற்கிடையே கள்ளிக்குடிக்கு காய்கறி வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வந்த மறுநாளே(அதாவது 1-ந் தேதி) ஏற்கனவே திறக்கப்பட்ட 5 கடைகளும் மூடப்பட்டு விட்டன. 3-வது நாளான நேற்றும் எவ்வித கடைகளும் திறக்கப்படவில்லை. திருச்சி மாநகரில் இருந்து வெகுதூரத்தில் கள்ளிக்குடி மார்க்கெட் இருப்பதால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் கள்ளிக்குடிக்கு செல்வதை அறவே தவிர்த்து விட்டனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள் ஏற்றி வரும் அனைத்து வகை லாரிகள் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. மினி லாரிகளை போலீசார் அனுமதித்ததால் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் வழக்கம்போல தங்களது வியாபாரத்தை தொடர்ந்து வருகிறார்கள். இருப்பினும் வழக்கத்தை விட காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது:-

காந்தி மார்க்கெட்டில் அனைத்து காய்கறி, பழங்கள் கடைகள் தடையின்றி வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் போலீசார் மார்க்கெட்டுக்கு லாரிகளை விட மறுப்பதை கண்டிக்கிறோம். நாங்கள் காலை 6 மணிக்குள் காய்கறிகளை இறக்கி விட்டு அனைத்து லாரிகளையும் அனுப்பி விடுகிறோம் என்று ஒரு முடிவெடுத்துள்ளோம். மளிகைக்கடை உள்ளிட்ட இதர கடைகளுக்கு வரும் வாகனங்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.

போலீசார் கெடுபிடியை தளர்த்தி கொள்ள வேண்டும். வழக்கம்போல காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்க வேண்டும்.இல்லையேல் போலீசாரின் கெடுபிடியை கண்டித்து தொடர்ந்து ஒருவார காலம் அனைத்து காய்கறி, பழங்கள் உள்ளிட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். போராட்டம் தொடர்பாக வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி போராட்டம் அறிவிக்கப்படும்.

காந்தி மார்க்கெட்டுக்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், அவற்றை ஒழுங்குபடுத்திட போதிய போலீசார் நியமிப்பதில்லை. லாரிகள் வந்ததால்தான் இடையூறு என்று இல்லை. காந்தி மார்க்கெட் வழியாக வரும் பஸ்கள், குறித்த நிறுத்தத்தில் நிற்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகிறார்கள். எனவே, பஸ்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் நிறுத்தப்பட வேண்டும் என்பதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்