கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 63 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-03 00:14 GMT
புதுக்கோட்டை,

வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக திரும்பபெற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, திருத்த சட்டம் அமலாவதை உறுதி செய்திட வேண்டும். அதனை அரசியல் சட்டத்தில் 9-வது அட்டவணையில் சேர்த்திட வேண்டும். வன்கொடுமைகள் புரிவோர் தண்டனைக்கு ஆளாகும் வகையில் சிறப்பு நீதிமன்றம், சிறப்பு வக்கீல்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு கட்சியினர் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் ஏராளமானோர் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து, காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் விடுதலைக்கனல், சசி.கலைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறு முகம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 63 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்