சேலத்தில் நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திடீர் முற்றுகை பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது, பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு நிலவியது.

Update: 2018-07-03 00:09 GMT
சேலம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமைசாலைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும், சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டணம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர், நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, பாரப்பட்டி, பூலாவரி உள்பட பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி பசுமை சாலைக்கு தேவையான நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தி அந்த இடங்களில் எல்லைக்கல் நட்டு வைத்தனர்.

இந்தநிலையில், சேலம் அருகே பாரப்பட்டி கிராமத்தில் 8 வழி பசுமை சாலைக்காக நடப்பட்டிருந்த எல்லைக்கல் சரியான இடத்தில் நடப்பட்டுள்ளதா?, குறியீடு எண் சரியாக உள்ளதா? இரண்டு எல்லைக்கல்லுக்கு இடையில் உள்ள தூரம் சரியாக இருக்கிறதா? என்பதை அளவீடு செய்வதற்கு நேற்று மதியம் 1 மணியளவில் வருவாய்த்துறை அதிகாரிகள் பாரப்பட்டி கிராமத்திற்கு வந்தனர். அப்போது, அதிகாரிகள் வருவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து நிலத்தை மீண்டும் அளவீடு செய்யாவிடாமல் அதிகாரிகளை தடுத்து முற்றுகையிட்டனர்.

அப்போது, 8 வழி சாலைக்கு கொடுக்கப்படும் நிலத்திற்கு தேவையான இழப்பீடு உரிய முறையில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதை கேட்காமல் பொதுமக்கள் தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலை 4 மணி வரையிலும் பொதுமக்கள் யாரும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்ததால் 8 வழிச்சாலைக்காக நடப்பட்டுள்ள எல்லைக்கல்லை அதிகாரிகளால் அளவீடு செய்யமுடியவில்லை.

இதனிடையே, பசுமை சாலைக்கு எதிராகவும், நிலம், வீடு, தோட்டம் போன்றவை அழிக்கப்படுவதாலும் பாதிக்கப்பட்ட சில பெண்கள் அங்கேயே தரையில் அமர்ந்து திடீரென ஒப்பாரி வைத்தனர். மேலும், சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் சுமார் 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்