தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.;

Update: 2018-07-02 23:58 GMT
சேலம்,

சேலம் கிச்சிபாளையம் நாராயணன் நகரை சேர்ந்த மாணவன் முகமது ஆஷாத் நேற்று முன்தினம் அங்குள்ள ஓடையில் தவறி விழுந்தான். அவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவன் தவறி விழுந்த ஓடை பகுதியை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. சேலம் மாநகரில் தொடர்ந்து பெய்த மழையினால் அதிகபட்சமாக 133.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது மிக அதிகமான பதிவாகும். இதனால் ஒரு சில இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் வருவாய் துறையினர் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் மாணவனை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் இந்த பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதால் தண்ணீர் வேகமாக செல்கிறது. சாக்கடை கால்வாய்களில் தடுப்புச்சுவர் கட்டப்படும். வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் இதுபோன்ற சம்பவம் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்