நகர் பகுதிகளில் வாகன போக்குவரத்து மாற்றங்கள் முறையாக அறிவிக்கப்பட வேண்டும், மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை

மாவட்டத்தில் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2018-07-02 23:52 GMT
விருதுநகர்,

பொதுவாக நகர் பகுதிகளில் பஸ் வழித்தடங்களில் மாற்றம் செய்வது என்பது வட்டார போக்குவரத்து துறை அதிகாரியால் கலந்தாய்வுக்கு பின் முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும். நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்வது என்பது மாவட்ட போலீஸ் நிர்வாகத்தால் அறிவிக்கப்படும். இம்மாதிரியான மாற்றங்கள் செய்வதற்கு முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையில் உள்ள அதிகாரிகள் உரிய கலந்தாய்வுக்கு பின் மாற்றங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை.

விருதுநகரில் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலப்பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதையாக குறுகலான தந்திமரத்தெரு பயன்பாட்டில் உள்ளது. இந்த தெரு வழியாக இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேன்களும், கார்களும் இத்தெரு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நடைமுறை மாற்றத்தை போக்குவரத்து போலீஸ் பிரிவினர் கண்டுகொள்ளாதது ஏன் என தெரியவில்லை.

விருதுநகர் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில் போக்குவரத்து பிரிவு போலீசார் இதுகுறித்து சில முடிவுகள் எடுப்பதாக சொல்லப்படுகிறது. மெயின் பஜாரை ஒரு வழி பாதையாக மாற்றவும், விருதுநகர் பகுதிக்குள் லாரிகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி முறையான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

எனவே இம்மாதிரியான வாகன போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து உரிய கலந்தாய்வுக்கு பின் பொது மக்களுக்காக எடுக்கப்படும் முடிவுகளை மாவட்ட போலீஸ் நிர்வாகம் முறையாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்