6 சட்டமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

கிருஷ்ணகிரியில் 6 சட்டமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.;

Update: 2018-07-02 23:38 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கதிரவன் நேற்று வெளியிட்டார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், ஊத்தங்கரை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்கள், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக கிராமப்புற வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்கள் மற்றும் நகர்புற வாக்குச்சாவடியில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து அமைக்கப்பட உள்ளது. மேலும் பழுதடைந்துள்ள வாக்குச்சாவடிகள், 2 கிலோ மீட்டருக்கு அதிகமாக தூரம் உள்ள வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசியல் கட்சிகள், குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் அல்லது ஆட்சேபணை இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி கலெக்டர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 8-ந் தேதிக்குள் மனுவாக கொடுக்கலாம்.

இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்