கியாஸ் குடோன் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் மனு

மெதுகும்மல் ஊராட்சியில், கியாஸ் குடோன் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரி கிராம மக்கள், குறைதீர்க்கும் கூட்டத்தின்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர்.;

Update: 2018-07-02 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 289 பேர் மனுக்கள் அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

எஸ்.டி.மங்காடு அருகே அதங்கோடு கரையான்விளையை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

மெதுகும்மல் ஊராட்சி 14–வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கரையான்விளை பகுதியில் கியாஸ் குடோன் அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஏற்கனவே முதல்–அமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர், ஊராட்சி தனி அலுவலர் ஆகியோருக்கு ஊர் மக்களின் கையொப்பத்துடன் மனு கொடுக்கப்பட்டு, அரசு அலுவலர்களால் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு கியாஸ் குடோன் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.

1–5–2018 அன்று மெதுகும்மல் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கியாஸ் குடோன் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ஊராட்சி தனி அலுவலரால் கியாஸ் குடோன் அமைக்க வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி ஏற்கனவே சுமார் 500–க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதியாகும். அருகிலேயே கோவில் உள்ளது. எனவே இந்த கியாஸ் குடோன் அமைந்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிராமசபை தீர்மானத்தை மீறி வழங்கப்பட்ட வரைபட அனுமதியை ரத்து செய்து எங்கள் குடியிருப்புக்கு மத்தியில் குடோன் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குருந்தங்கோடு அருகே சரல் பகுதியை அடுத்த ஆசாரிவிளை பாரதியார் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த அஸ்வதி என்பவர் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

இந்த காலனி அரசால் உருவாக்கப்பட்டது. இதில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த காலனியில் பொது பயன்பாட்டுக்கு என அரசால் ஒதுக்கப்பட்ட 33 சென்ட் இடத்தை சிலர் தங்களது சுய தேவைக்காக ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே அந்த இடத்தை மீட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் சமூக நலக்கூடம் கட்டவும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் படிப்பகம் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பதிசாரம் கீழூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீவிபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து சாம்பலானது. அவருடைய மகளும் காயம் அடைந்தார். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் ரமேஷின் மகள்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது ஒரு அதிகாரி ரமேஷ் குடும்பத்தினரை மதம் மாறச்சொன்னதாக கூறப்படுகிறது. எனவே ரமேஷ் மகள்களின் எதிர்கால நலன்கருதி சாதி சான்றிதழ் வழங்கி, மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்