அரசு பள்ளியில் புத்தகங்கள் எரிப்பு; ரூ.20 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தக்கலை அருகே அரசு பள்ளியில் புகுந்து புத்தகங்களை தீவைத்து எரித்துவிட்டு, ரூ.20 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-07-02 23:30 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அரசு தொடக்கப்பள்ளியும், மேல்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் திருவிதாங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் மாணவ–மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகளை வைப்பதற்கு ஒவ்வொரு வகுப்பறையிலும் பீரோக்கள் உள்ளது.

இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்று காலை 8.30 மணிக்கு ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தை திறந்தனர். பின்னர் ஒவ்வொரு வகுப்பறைகளையும் ஊழியர்கள் திறந்தனர்.

அப்போது, மேல்நிலைப்பள்ளியில் 5–ம் வகுப்பு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வகுப்பறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மாணவ–மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தன. யாரோ மர்ம நபர்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள பரிசோதனை கூடத்தின் அறையின் பூட்டையும் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு எந்த பொருட்களையும் திருடவில்லை.

அதைத்தொடர்ந்து சத்துணவு கூட அறையில் மாணவர்களுக்கு வழங்க வைத்து இருந்த முட்டையை சேதப்படுத்தியுள்ளனர்.

 மேலும், பெற்றோர்– ஆசிரியர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கேண்டீன் கதவை உடைத்து அங்குள்ள பொருட்களையும், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா ஹலன் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்லத்துரை ஆகியோர் தக்கலை போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை  வலைவீசி தேடி     வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்