கபினி - கே.ஆர்.எஸ். அணைகள் வேகமாக நிரம்புகின்றன

தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 23,515 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2018-07-01 23:29 GMT
மைசூரு,

கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 23,515 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி ஆறு. இந்த ஆறு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணை அமைந்துள்ளது. இந்த அணை மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்திருக்கிறது. காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் ஆகியவை விளங்கி வருகிறது.

அந்த பகுதிகளில் கனமழை பெய்தால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கே.ஆர்.எஸ். அணையை சென்றடையும். அதேபோல் வயநாடு பகுதியின் மற்றொரு புறத்தில் பெய்யும் மழை கபிலா ஆற்றில் கலந்து மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையை சென்றடைகிறது.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கபிலா ஆற்றின் வழியாக காவிரியில் கலந்து நேரடியாக தமிழ்நாட்டை சென்றடைகிறது. அதேபோல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் நேரடியாக தமிழகத்தை சென்றடைகிறது. இதில் கபினி அணையின் கொள்ளளவு 2,284 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். கே.ஆர்.எஸ். அணையின் கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

தற்போது தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த 2 அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதில் கபினி அணை 2,283.80 அடியை எட்டிவிட்டது. அந்த அணை முழுமையாக நிரம்ப இன்னும் ஒரு அடிதான் உள்ளது.

கே.ஆர்.எஸ். அணை 108.30 அடியை எட்டிவிட்டது. இந்த அணை நிரம்ப இன்னும் 16.50 அடி பாக்கி இருக்கிறது. இந்த 2 அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கணிசமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,515 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த 2 அணைகளிலும் சேர்த்து தமிழ்நாட்டுக்கு மொத்தம் வினாடிக்கு 23,515 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்