நெருக்கடிநிலை பிரகடனத்தை காரணம் காட்டி இந்திரா காந்தியின் பங்களிப்புகளை புறக்கணித்துவிட முடியாது

நெருக்கடிநிலை பிரகடனத்தை காரணம் காட்டி இந்திரா காந்தியின் பங்களிப்புகளை புறக்கணித்துவிட முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-07-01 22:59 GMT
மும்பை,

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சியின் போது நாடுமுழுவதும் நெருக்கடிநிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். இந்த காலகட்டம் ஜனநாயகத்தின் இருண்ட பக்கம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இந்தநிலையில் நெருக்கடிநிலை பிரகடனத்தின்போது சிறை சென்றவர்களுக்கு தியாகிகள் ஓய்வூதியம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டது.

இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. சுதந்திர போராட்ட தியாகிகளை நெருக்கடிநிலை பிரகடனத்தின்போது சிறை சென்றவர்களுடன் ஒப்பிடுவது சுதந்திர போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயல் என காங்கிரஸ் விமர்சித்தது.

இந்தநிலையில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னாவில்’ அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அளவுக்கு நாட்டிற்காக யாரும் சிறப்பாக சேவையாற்றியது இல்லை. நெருக்கடிநிலை பிரகடனத்தை மட்டும் காரணம் காட்டி அவரது பங்களிப்புகளை புறக்கணித்துவிட முடியாது.

முன்னாள் பிரதமர் நேரு, வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், சாவர்க்கர், ராஜேந்திர பிரசாத், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்புகளை புறக்கணிப்பது தேச துரோகமாகும். நெருக்கடிநிலை பிரகடனம் இந்தியாவின் கருப்பு தினமாக அழைக்கப்படுமானால் தற்போதைய ஆட்சியிலும் பல கருப்பு தினங்கள் உள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு தினமும் ஒரு கருப்பு தினமே ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்