நிதி நெருக்கடியில் தவிக்கும் திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சி நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
முருகபவனம், திண்டுக்கல் மாநகராட்சி நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சி பொதுவாக உள்ளாட்சி நிர்வாகம், ஒரு ஊரில் வசிக்கும் மக்கள்தொகை பெருக்கம், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற பல காரணங்களை கணக்கிட்டு அந்த ஊரை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அறிவிக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் பகுதியில் வசித்து வரும் மக்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கையை கொண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பொதுவாக, நகராட்சியின் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை உள்ளாட்சி நிர்வாகம் வழங்குவது வழக்கம். ஆனால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும், அந்த ஓய்வூதியத்தை அந்தந்த மாநகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும் என்கிற விதி உள்ளது. அதனால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உள்ளாட்சி நிதி நிறுத்தப்பட்டது. அதனால் ஓய்வூதியத்தை மாநகராட்சி நிர்வாகமே தற்போது வழங்கி வருகிறது. நிதி நெருக்கடி இதையொட்டி 35 சதவீத நிதி நெருக்கடியில் மாநகராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, முன்பு வழங்கப்பட்டதை விட தற்போது கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனாலும் சுமார் 40 சதவீத நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் நிதி நெருக்கடிகளால் மக்களுக்கு தேவையான சில அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத இக்கட்டான சூழலில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு வருடத்துக்கென மாநகராட்சியின் ஏல வருமானத்தொகை சில லட்சங்களில் இருந்ததை சுமார் ரூ.3 கோடி அளவில் உயர்த்தி இருப்பதாகவும், இதுதவிர சொத்து, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில் வரிகளையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் மக்களின் அடிப்படை தேவைகளை தாமதமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. |