கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2018-07-01 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி, நொய்யல் ஆறுகளில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதாகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்ததால், போலீசார் தீவிரமாக கண்காணித்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாயனூர் மற்றம் லாலாபேட்டை பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணராயபுரம் தாலுகா கிளிஞ்சாநத்தம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற கருணாகரன்(வயது 38) மீது போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு மணல் திருட்டு வழக்கில் மாயனூர் போலீசார் அவரை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் கருணாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கருணாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாகரனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

இந்நிலையில் மணல் திருட்டால் ஆற்றில் நீரோட்டம் பாதிக்கப்படுவதோடு பழமை வாய்ந்த பாலங்கள் உள்ளிட்டவையும் சேதமடைய வாய்ப்பிருக்கிறது. எனவே மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்