காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் கர்நாடகத்திடம் மத்திய அரசு கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் கர்நாடகத்திடம் மத்திய அரசு கண்டிப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-07-01 22:45 GMT
திருச்சி,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில அரசை பொறுத்தவரை எப்படியாவது காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தவறான வழியில் செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது. கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை (இன்று) மத்திய அரசு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றி, இந்திய நாட்டின் ஜனநாயகத்தை தழைக்க செய்யவேண்டும். தமிழகத்தில் 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாமல் இருப்பதால், மத்திய அரசு கர்நாடகத்திடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

திருச்சி காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்கு மாற்றம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கொலை, கொள்ளை, தாலிச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் பகலில் கூட வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தான் நல்லாட்சி நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து வரும் இந்த அரசுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதற்கான காரணத்தை முதல்-அமைச்சர் விளக்கவேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நிலத்தை அளவீடு செய்வது சரியல்ல. மக்களை கட்டாயப்படுத்தி, திணிக்க நினைக்கும் எந்த ஒரு திட்டமும் நியாயமாக இருந்தால் கூட நிறைவேறாமல் போய்விடும். வருகிற 8-ந்தேதி சேலத்திற்கு சென்று எட்டு வழிச்சாலை திட்டம், மற்றும் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன்.

கடலூரில் ஒரு விவசாயி தனியார் வங்கி கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அந்த தனியார் வங்கி தொடர்ந்து இதேபோல் நடந்து கொண்டால் தமிழகத்தில் அதனை மூடுவதற்கான கோரிக்கையை த.மா.கா. விவசாய அணி வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியுடன் த.மா.கா. இணைக்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறதே என வாசனிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு ‘அது வடிகட்டிய பொய், வாட்ஸ்-அப்பில் வருவதை எல்லாம் கேள்விகளாக கேட்காதீர்கள்’ என பதில் அளித்தார்.

பேட்டியின்போது த.மா.கா. மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல் (மாநகர்), குணா (தெற்கு), ரவீந்திரன் (வடக்கு) ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்