சாமியார்மடம் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மோதி மகன் கண் எதிரே பெண் பலி

சாமியார்மடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மகன் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார். மேலும், 3 வயது குழந்தை படுகாயம் அடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-07-01 22:15 GMT
பத்மநாபபுரம்,

சாமியார்மடம் அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் நடராஜன், கூலி தொழிலாளி. இவரது மனைவி ரெத்தினபாய் (வயது55). நேற்று முன்தினம் இரவு ரெத்தினபாய் அவரது மகன் மகேஷ் (29) மற்றும் மகளின் குழந்தை அனுபிரித்திகா (3) ஆகியோர் புலிப்புனம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக கண்ணனூரை சேர்ந்த ஷாஜின் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ரெத்தினபாய் மீதும் அவரது பேத்தி அனுபிரித்திகா மீதும் மோதியது. இதில் அவர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தனது கண்முன்பு நடந்த விபத்தினால் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அவர் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே ரெத்தினபாய் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அனுபிரித்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மோதி, மகன் கண்முன்பு பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்