புதுவை சட்டசபையில், இன்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

புதுவை சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முதல்–அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Update: 2018-07-02 00:00 GMT

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி 4 மாத செலவினங்களுக்காக ரூ.2468 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 27–ந் தேதி கவர்னர் கிரண்பெடி தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடந்தது. இதில் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 4–ந்தேதி தொடங்கியது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததையொட்டி 2 நாட்கள் மட்டுமே நடந்த இந்த கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரியையும், அதிகாரிகளையும் சந்தித்து பேசி கடந்த 19–ந் தேதி புதுவை மாநில பட்ஜெட்டிற்கு அனுமதி பெற்றார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. அப்போது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமி 2018–19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதில் இலவச அரிசி முறையாக வழங்கப்படாதது, அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டணத்தை ரூ.1 லட்சத்து 37 ஆயிரமாக உயர்த்தியது, சென்டாக் நிதியை இதுவரை வழங்காதது, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 1½ ஆண்டுகளாக சம்பளம் வழங்காதது, கவர்னரின் நடவடிக்கையால் மின்துறை மற்றும் உள்ளாட்சித்துறையில் நிலுவை வரி மற்றும் கட்டணம் வசூல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேலும் செய்திகள்