மாவட்டத்தில் 713 வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீட்டு திட்டம் பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கடலூர் மாவட்டத்தில் 713 வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் தண்டபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உ தவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் ஏற்படுத்தப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தில் கார், குறுவை, சொர்ணவாரி நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 713 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் இன்சூரன்சு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமாகவோ, பொதுச்சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம்(ஜூலை) 31–ந்தேதி ஆகும். காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, கம்பு, மணிலா, எள் மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 16–ந்தேதி ஆகும்.
பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு 540 ரூபாயும், இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளத்துக்கு 340 ரூபாயும், உளுந்துக்கு 286 ரூபாயும், கம்பு பயிருக்கு 106 ரூபாயும், மணிலாவுக்கு 452 ரூபாயும், எள்ளுக்கு 136 ரூபாயும், பருத்திக்கு 965 ரூபாயும் காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.