திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; 2 பேர் பலி

திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-07-01 21:45 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 30), கொத்தனார். இவர் நேற்று காலை தனது மனைவி லட்சுமி(28), மகள் யுவராணி(4) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நொளம்பூரில் உள்ள அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மனைவி, மகளுடன் மதியம் தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த கீழ்கூடலூர் ஏரிக்கரை சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், கோபாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நொளம்பூர் இந்திரா நகரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் விக்னேஷ்(22) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சுமி, யுவராணி மற்றும் விக்னேசுடன் வந்த அவரது நண்பர் நொளம்பூரை சேர்ந்த ரஜினி மகன் ராஜசேகர்(18) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தாய், மகள் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமி, அவரது மகள் யுவராணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசேசதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்