காலை 10 மணிக்கே ஜோராக நடைபெறும் மது விற்பனை: அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் ஊழியர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு

விழுப்புரத்தில் அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, டாஸ்மாக் கடைகளில் காலை 10 மணிக்கே ஊழியர்கள் ஜோராக மது விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகளும் துணைபோவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Update: 2018-07-01 22:30 GMT

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது. இங்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாகவும், கள்ளச்சந்தையிலும் மதுவிற்பனை செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தினமும் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவை மீறி விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் தினமும் காலை 10, 11 மணிக்கே ஒரு சில டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் அரசு அறிவிப்பை மீறி நேற்று காலை 10 மணிக்கே திறக்கப்பட்டு, மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் மதுவிற்பனையாகும் என்கிற நோக்கில் முன்கூட்டியே டாஸ்மாக் கடையை திறந்து மதுவிற்பனையில் ஈடுபட்டு உள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் காலை 10, 11 மணிக்கே கடையை திறந்து மது விற்கும் துணிவை பார்க்கையில் உயர் அதிகாரிகளின் துணையின்றி இதுபோன்ற மது விற்பனையில் இவர்கள் நிச்சயம் ஈடுபட மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகையால் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று கூறி, மதுக்கடைகள் குறைப்பு நடவடிக்கை, மேலும் டாஸ்மாக் திறந்து இருக்கும் நேரத்தை குறைத்து, நேரம் மாற்றி அமைப்பு போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் அரசின் உத்தரவையெல்லாம் இவர்கள் காற்றில் பறக்கவிட்டு மதுவிற்பனையை ஜோராக நடத்தி வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்