ஓட்டலில் தகராறு: குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் அடித்துக்கொலை

வேளாங்கண்ணி அருகே ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் அடித்துக்கொல்லப்பட்டார்.

Update: 2018-07-01 23:00 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் வேளாங்கண்ணி அருகே உள்ள பரவையில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த செட்டி மகன் செல்வராமன் (வயது 27) தனது நண்பர்களுடன் தர்மலிங்கம் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தார்.

இதுகுறித்து தர்மலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் செல்வராமன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் செல்வராமன் மீண்டும் தர்மலிங்கத்தின் ஓட்டலுக்கு சென்று தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தர்மலிங்கம் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து செல்வராமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தர்மலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்