மத்திய மந்திரி ஆய்வுக்கு பின்பும் தரவரிசையில் பின் தங்கிய விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மத்திய மந்திரியின் ஆய்வுக்கு பின்பும் நிதி ஆயோக் அமைப்பின் தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியுள்ளதால் திட்டச்செயல்பாட்டினை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-07-01 22:45 GMT

விருதுநகர்,

முன்னேறத்துடிக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம் மத்திய மந்திரியின் ஆய்வுக்கு பின்பும் நிதி ஆயோக் அமைப்பின் தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியுள்ளதால் திட்டச்செயல்பாட்டினை மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் மத்திய அரசு ஓவ்வொரு மாநிலத்திலும் முன்னேறத்துடிக்கும் மாவட்டங்கள் என தேர்வு செய்துள்ளதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமும் ராமநாதபுரம் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் தொடக்கக்கல்வியின் தரம், பெண்குழந்தை பிறப்பு சதவீதம் குறைவு, மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளை முன்னேற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய மத்திய அரசு இதற்கென மத்திய அரசு அதிகாரி பிரவீன்குமாரையும் மாநில அரசு அதிகாரி சந்தோஷ்பாபுவையும் நியமித்தது.

மேலும் திட்டச்செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களில் திட்டப்பணிகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டார். கடந்த மே மாத ஆய்வின் போது திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆன்–லைன் மூலம் தகவல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றார்.

தற்போது மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் சுகாதாரம், கல்வி, விவசாயம் அடிப்படை வசதி, நிதி மேம்பாடு ஆகிய துறையில் திட்டச்செயல்பாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்விற்கு முன்பு திட்டச்செயல் பாட்டிற்கான தரவரிசை பட்டியலில் 8–வது இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் ஆய்வுக்குப் பின்னர் 10–வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் திட்டச்செயல்பாட்டில் பின்தங்கியதுதான். மத்திய மந்திரியின் ஆய்வுக்குப்பின்னும் குறிப்பிட்ட துறைகளின் திட்டச்செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படாதது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதுபற்றி மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:–

சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடிந்த நிலையில் திறன்மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட சில துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை. திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க தகுதிஉள்ள நபர்களின் புள்ளி விவரங்கள் இல்லாத நிலையில் இந்த இலக்கினை எட்ட முடியவில்லை. தற்போது இந்த புள்ளி விவரங்களை சேகரிக்க பல்வேறு துறைகளின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகத்தால் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டாலும் அதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோர் அவர்கள் எதிர்பார்ப்பின் படி வேலை அமையாத காரணத்தால் அந்த வேலைக்கு செல்ல தயங்குகிறார்கள். எனவே தற்போது கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கிகளில் பிரதம மந்திரியின் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கிராம மக்களிடையே கிராமசபை கூட்டங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எது எப்படியாயினும் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் தரும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளாமல் பின்தங்கிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு குறைபாடுள்ள திட்டப்பணிகளின் செயல்பாடுகளை வேகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் பல்வேறு துறைகளின் களப்பணியாளர்கள் மூலமும் கிராம மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி திட்டப்பலன்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அத்தியாவசிய தேவையாகும்.

மேலும் செய்திகள்