புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மானாமதுரையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க தனியார் பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை,
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மானாமதுரை நகருக்கு 63 கிலோ வாட் திறனுள்ள 23 கே.வி உடைய 37 டிரான்ஸ்பாமர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியை மின்வாரிய அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
மானாமதுரை ஆர்.சி தெருவிற்குட்பட்ட 15,16,17 ஆகிய வார்டு பகுதிகளில் வங்கிகள், மர அறுவை மில்கள், 500–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குறைந்த மின்னழுத்தம் காரணமாக பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சிரமப்பட்ட நிலையில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி ஆர்.சி தெருவில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகம் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி முடக்கம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பணியை தொடங்கவேண்டும் என்று அந்தப்பகுதியில் வசிப்போர் மின்வாரிய அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:–
பள்ளி நிர்வாகம் வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட பொது இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வரும் நிலையில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல. இந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அதிகாரிகள் பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.