கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கலெக்டர் வீரராகவராவ் தகவல்

கல்லூரி மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் கூறியுள்ளார்.

Update: 2018-07-01 22:30 GMT

மதுரை,

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே வருகிற அக்டோபர் மாதம் 15.–ந் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

செப்டம்பர் மாதம் 1–ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 15–ந் தேதிக்கு முன்பும், புதியதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30–ந் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு www.tn.gov.in/bcmbcdept என்ற அரசு இணையதளத்தில் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்